பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

79



“பூமியிலே நீகடவுள் இல்லை யென்று
        புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை:
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கிச்
        சதாகாலம் ‘சிவாஹோ’ மென்று சாதிப் பாயே.”8[1]

என்று இக்கருத்தைப் பாரதியார் வலியுறுத்துவதைக் காணலாம். இதில் சர்வ சமய சமரசத்தையும், முழுமுதற்பொருள் ஒன்றே என்ற கருத்தையும் வலியுறுத்துவதையும் காணலாம். இக்கருத்துகளுக்கு இசைவாய்.

“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கில்
        விளங்குபரம் பொருளே!நின் விளையாட் டெல்லாம்
மாறுபடும் கருத்தில்லை, முடிவில் மோன
        வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!”9[2]

என்ற தாயுமான அடிகளின் கருத்து அமைந்திருப்பதையும் கண்டு மகிழலாம்.

“மூர்த்திகள் மூன்று பொருள்ஒன்று - அந்த
மூலப் பொருள்ஒளியின் குன்று”10[3]

என்று அண்மையில் பாரதியார் கூட சொல்லிப் போந்தார். இங்ஙனம் அருளாளர்கள் முழுமுதற்பொருள் ஒன்றே என்ற கருத்திற்குக் கொண்டு செலுத்தினாலும், இந்திய சமயங்கள் இத்தகைய ஆன்மிகத் தத்துவக் கருத்துகளை இன்னும் தங்கள் வழிபாட்டு முறைகளிலும் ஏனைய சடங்குகளிலும் ஏற்று அதற்குத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொள்ளவில்லை என்ற நிலையைத்தான் காண்கின்றோம். சடங்குகளும் தோத்திரப் பாடல்களும் நமது வழிபாட்டுப் பண்பாடாய் வளர்ந்தோங்கியுள்ளன. ஆன்மிகத் தத்துவத் தாக்கங்கள் நமது சமய நெறிமுறைகளில் கணிசமாய்ப் பிரதிபலிக்கப்பெறாமல் இன்றும் இருந்து வருவதைத்தான் காண்கின்றோம். பல கடவுளர்களின் வழிபாடு பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து காணப்பெறுகின்றது. ஆயினும், இறைவன் ஒருவனே என்ற கருத்து மக்களிடம் பரவலாய்க் காணப்பெறுகின்றது.


  1. 8. பாரதி அறுபத்தாறு - 66
  2. 9. தாயு. பாடல்கள் - 630
  3. 10. பா.க-தோ.பா - 23, சக்தி விளக்கம் - 7