பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



இந்தக் கருத்தினை அருளாசிரியர்களும் ஒரோவழி சுட்டியும் சென்றுள்ளனர்.

“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிதாம் தெள்ளேணம் கொட்டாமோ?”
- திருவா. திருததெள்-1

என்று மணிவாசகப்பெருமான் சுட்டியுரைத்துள்ளதை நினைக்கின்றார்கள்.

“வணங்கும் துறைகள் பலபல
        ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல
        ஆக்கி, அவை அவைதொறும்
அணங்கும் பலபல ஆக்கிநின்
        மூர்த்தி பரப்பி வைத்தாய்”
- திருவிரு.96

என்று நம்மாழ்வாரும் தெளிந்துரைப்பதையும் அவர்கள் நினைவு கூராமல் இல்லை. ஆயினும், அவர்தம் ஆசாபாசங்களையும் இன்பதுன்பங்களையும் ஆசை நிராசைகளையும் பகிர்ந்துகொள்ள ஏதோ ஒரு குறிப்பிட்ட உருவ வழிபாடு தேவைப்படுகின்றது. நம்பிக்கைக்கு ஏற்ப ஏதோ கடவுள் உருவகப்படுத்தப்பெறுகின்றார். பல்லாயிரக்கணக்கில் வழிபாட்டுத் தெய்வங்கள் அமைந்துவிடுகின்றன. கொள்கையளவில் யாவற்றிற்கும் அடிப்படை ஒரு பொருள் (Monotheism) ஏற்றுக்கொள்ளப்பெற்றாலும் நடைமுறையில் - வழக்கில் - பல கடவுள் முறை (Polytheism) பேணி வளர்க்கப் பெறுகின்றது; பயன்படுத்தவும் பெறுகின்றது. அதிகம் பேசுவானேன்? பல்லாண்டுகளாய்ச் சமயங்களையும் தத்துவங்களையும் ஆய்ந்தவன் அடியேன். ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற திருமூலர் கருத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டு தெளிந்தவன். எனினும், திருவேங்கடவன், பழநிமுருகன், விநாயகப் பெருமான் இவர்களிடம் கொண்டிருக்கும் பற்றினைக் கழற்றிவிட முடியவில்லை.

(2) சமயங்களின் ஒருமைப்பாடு : “எல்லாச் சாலைகளும் உரோமாபுரியை நோக்கிச் செல்லுகின்றன” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. இதனை நம் நாட்டுப் பழமொழி, “ஆறுகள் யாவும் ஆழ்கடலை நோக்கிச் செல்லுகின்றன” என்று கூறும். இக்கருத்தைக் குலசேகரப் பெருமாளின்,