பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



ஆகாயம் என விரவி நிற்கும் என்றும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும் என்றும் அவர் கூறுவார். இவ்விரண்டனையும் உலகம் கொண்டிருத்தலால் ‘கலந்த மயக்கம்’ என்றாராயிற்று.

இந்த நூற்பாவின் கருத்தினை அடியொற்றியது போல் கம்பநாடன்,

“அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
        அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
        வேறுபாடு உற்ற வீக்கம்”12[1]

என்று இராமர் தோத்திரமாய்க் கூறி விளக்குவான். அலங்கலைக் கண்டு அரவு என மருளுதல் திரிபுணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. ஐந்து பூதங்களும் தனித்தனியாய் இருக்கும் தன்மையினின்றும் நீங்கி ஒன்றாய்ச் சேர்வதனாலும், அங்ஙனம் சேர்ந்து சேர்க்கை அறுவகையாய் விகாரப்படுவதனாலும் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என்ற பாகுபாடு கொள்வதனாலான இந்த உலகத் தோற்றம் திரிபுணர்ச்சியை உண்டாக்குதல் கூடும். இந்தத் திரிபுணர்ச்சி உண்மைப் பொருளைக் கண்டமாத்திரத்தில் ஒழிந்துவிடும் என்பது கவிஞன் உணர வைக்கும் கருத்தாகும்.

“பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு” (மெய்யுண்ர்தல் - 1)

என்ற குறளின் கருத்தையும் இதில் காணலாம். “விபரீத உணர்வாவது மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுள் இல்லையெனவும், மற்றும் இத்தன்மையன சொல்லும் மயக்கநூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்குகள் எனத் துணிதல், குற்றியை மகன் என்றும், இப்பியை வெள்ளி என்றும், இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாய்த் துணிதலும் அது” என்பது பரிமேலழகரின் விளக்க உரையாகும். மேலும், வள்ளுவப்பெருந்தகை,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”
(மெய்யுணர்தல் -10).

என்று உணர்த்துவர். வைணவ தத்துவமும் இத்திரிபுணர்ச்சியை விளக்குகின்றது. உயிரல்லாத உடம்பை உயிர் என்ற எண்ணமும்,


  1. 12. கம்பரா - சுந்தர. காப்பு}}