பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

83



கடவுளுக்கு அடிமைப்பட்ட உயிரைச் சுதந்தரம் உடையது என்று எண்ணுதலும், பிறருக்கு அடிமையல்லாத உயிரைப் பிறருக்கு அடிமையாகக் கருதுதலும், தலைமைத் தேவர் அல்லாதார் பக்கல் தலைமைத் தேவர் என்ற நினைப்பும் தலைமைப்பேறு (புருஷார்த்தம்) செல்வம் முதலியவற்றினிடத்துப் பரம புருஷார்த்தம் என்ற நோக்கமும் உபாயமாக மாட்டாத கர்மம் முதலியவற்றில் உபாயம் என்ற சிந்தனையும் தொடக்கமானவை என்பதாம்.

ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயம் மிகப்பெரியதாகலின். அவற்றுள் ஏனைய நான்கும் - அஃதாவது காற்று, தீ, நீர், பூமி ஆகியவை - அடங்கும். இந்தியத் தத்துவ தரிசனத்தின்படி நமது ஐம்பொறிகளின் வாயிலாய் ஐம்பெரும் பூதங்களாலாகிய உலகம் பொருள்படுத்தப்படுகின்றது; நம்மனத்திற்கு இலக்காகின்றது. ஐம்புலன்களாலன்றி உலகம் நமக்குப் புலனாகாது.

இதனை,

“சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்(று) ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.”13[1]

என்று குறிப்பர், வள்ளுவப் பெருந்தகையார்.

காது கேட்கின்றது. ஓசைக்கு ஏதுவாயிருப்பது, ஆகாசம் (வானம்). உடல் ஊற்றுணர்வால் உணர்கின்றது. அதற்கு ஏதுவாயிருப்பது, காற்று, கண், வடிவத்தைப் பார்க்கின்றது. ஒளிக்கு ஏதுவாயிருப்பது, நெருப்பு (தீ அல்லது தேஜஸ் - தேயு). நாக்கு சுவைக்கின்றது. சுவைக்கு மூலகாரணம், அப்பு (நீர்). மூக்கு, நாற்றத்தை உணர்கின்றது. அதற்குக் காரணம் பிருதிவி (பூமி). ஆக, உலகாக அறிவதற்கு மூலப் பொருள்களாய் இருப்பன பூதங்கள் ஐந்தாகும்.

இந்த ஐம்பெரும் பூதங்களும் சூக்குமம், தூலம் என்று இரு நிலைகளில் உள்ளன. சூக்குமப் பூதங்கள் தூலவமாக வடிவெடுப்பதற்கு ஒரு கணக்கு முறை உண்டு.

ஆகாயம் வாயு


  1. 13. நீத்தார் பெருமை - 7 (27)