பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

விட்டுத்தடுக்கி தன் அடிப்படை மையமாகக் கொண்டு முன்னும் பின்னுமாக அசையும். இவ்வாறு அசையும்போது முளைகள் மாறி மாறிப் பல் உருளையில் பதிந்து விலகும். இதனால் பல் உருளை சுழலும். இச்செய்முறையால் பல் உருளையினின்றும் விட்டுத்தடுக்கி விசையைப் பெற்று இவ்விசையை ஊசல் தண்டிற்குக் கொடுக்கும்.

1675ல் கிரகாம் என்பார், அமைத்த விட்டுத் தடுக்கி திருப்பித்தாக்கா விட்டுத்தடுக்கி (Dead beat escapement) இதில் முளைகளும், முளைப்புயங்களும் ஏற்ற வடிவில் செய்யப்பட்டுத் திரும்பித்தாக்கா வண்ணம் அமைக்கப்ப்ட்டன.

பொது இடங்களிலுள்ள பெரிய கடிகாரங்களின் முட்களின்மீது காற்றுப் படுவதால் விட்டுத்தடுக்கியின் மீதும், ஊசல்தண்டின் மீதும் செலுத்தப்படும் விசை மிகவும் மாறுபடும். இம்மாறுபாட்டினால், கடிகாரம் சரியான காலத்தைக் காட்டாது. இக்குறையை நீக்க, ‘நில ஈர்ப்பு நெம்புகோல் விட்டுத்தடுக்கி’ (Gravity lever escapement) எனப்படும் அமைப்புக் கையாளப்படும்.