பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


44. இவற்றின் வகைகள் யாவை?

1. ஒளிஇயக்கம்: தூண்டல் ஒளி. பூக்கள் மலர்தல்.

2. மேலியக்கம்: பூ மூடுதல்.

3. கீழியக்கம் : தாவரக் கீழ்ப்பகுதி அதிகம் வளர்தல்.

4. வெப்பஇயக்கம்: நிலைத்த ஒளிச்செறிவில் டூலிப் பூக்கள் வெப்பக்காற்றில் மலர்ந்து குளிர்க்காற்றில் மூடுதல்.

5. இரவியக்கம்: ஆக்சாலிஸ் இலைகள்.

6. தொடு இயக்கம்: வீனஸ் பறப்புக்கண்ணி.

45. ஒளித்தூண்டல் இயக்கம் என்றால் என்ன?

திசையைப் பொறுத்து அமையாமல், மாறிய ஒளிச் செறிவுத் துண்டல்களால் சில தாவரங்கள் வெளிப்படுத்தும் துலங்கல். எ-டு. பசலைக்கீரை.

46. காற்றமைவு இயக்கம் என்றால் என்ன?

இது உயிர்வளிச் செறிவு வாட்டத்திற்குத் துலங்கலாக உள்ளது. எ-டு இயங்கக் கூடிய குச்சிவடிவ உயிர்கள் நேரிடை (+) அமைவியக்கமும் இயங்கக்கூடிய கட்டாயக் காற்றுப் பருகு குச்சிவடிவ உயிர்கள் எதிரிடை (-) அமைவு இயக்கமும் கொண்டவை.

47. வேதியமைவு இயக்கம் என்றால் என்ன?

வேதித் தூண்டலுக்கேற்றவாறு குறிப்பிட்ட திசையில் உயிரிநகர்தல், எ-டு. பெண்ணணு நோக்கித் தாவர ஆண் அணு செல்லுதல்.

48. ஒளியமைவு இயக்கம் என்றால் என்ன?

ஒளித்தூண்டலால் நடைபெறும் இயக்கம்.

49. ஒளிவாழ்விகள் யாவை?

பசுந்தாவரங்கள்.

50. ஒளிநாட்டம் என்றால் என்ன?

இது ஒளியினால் ஏற்படும் வளைவியக்கம். ஒளிநோக்கித் தண்டு வளரும்.

51. நீர்நாட்டம் என்றால் என்ன?

தூண்டல்நோக்கி அமையும் அசைவு இது. ஒருவகை வேதிநாட்டம்.