பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63



7. முன்நல்லுயிரிகளின் (prokaryotes) சிறப்பியல்புகள் யாவை?

படலஞ்சூழா உயிரிகள். நீலப்பசும்பாசி, குச்சிவடிவ உயிரிகள் முதலியவை. இவற்றின் உறுப்புகளில் உட்கருப் படலம் இல்லை. இதுவே இதற்குப் பெயர்க்காரணம்.

8. நச்சியம் (வைரஸ்) என்றால் என்ன?

அலி உயிரி. ஒம்பு உயிரியில் இருக்கும் வரையில் உயிருள்ளது. படிகமாக்கலாம். மீநுண்ணோக்கி மூலமே காணலாம். தீமைகளையே உண்டாக்குவது.

9. இதைக் கண்டறிந்தவர் யார்?

1892இல் உருசியத் தாவர இயலார் இவனோஸ்சி கண்டறிந்தார்.

10. நச்சியம் உண்டாக்கும் நோய்கள் யாவை?

அக்கி, சளிக்காய்ச்சல், நீர்க்கொள்ளை, நாய்க்கடி

11. எஸ்வி 40 என்னும் நச்சியத்தின் முழு மரபணு அமைப்பு எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?

1978இல் கண்டுபிடிக்கப்பட்டது.

12. கோல்வடிவ உயிரி (பேசிலஸ்) என்றால் என்ன?

கோல்வடிவ நுண்ணுயிரி. காற்றுப் பருகும் உயிரணு உண்டு. உட்சிதல்களால் இனப்பெருக்கம் செய்வது. இயக்கத்திற்குப் பெரும்பாலானவற்றிற்கு நீளிழைகள் உண்டு. இது சாறுண்ணி, எ-டு. பேசிலஸ் ஆந்தராசிஸ்.

13. தொண்டை அடைப்பான் என்பது யாது?

இது ஒரு நோய். பேசிலஸ் ஆத்தராசிஸ் என்னும் நுண்ணுயிரினால் கால்நடையிலும் மனிதனிடத்தும் உண்டாவது.

14. குச்சி வடிவ உயிரிகளால் (பாக்டீரியா) ஏற்படும் தீமைகள் யாவை?

இசிவு, என்புருக்கி நோய், தொண்டைஅடைப்பான், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, கொள்ளைநோய், மேகநோய் முதலிய நோய்களை உண்டாக்குபவை.

15. குச்சிவடிவ உயிரிகளின் நன்மைகள் யாவை?

தோசைமாவு புளித்தல், இலைகள் நார்கள் ஊறிப் பதமாதல், குப்பைகளங்கள் மட்குதல் முதலியவை நன்மைகள்.