பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


14. வெர்தெய்ம் அறுவை என்றால் என்ன?

கருப்பைப் புற்றுநோய்க்குரிய ஆய்வு. இதில் கருப்பை, அதன் குழல்கள், சூல்பைகள், நிணநீர் முண்டுகள் முதலியவை அறவே நீக்கப்படும்.

15. ஹெல்லர் அறுவை என்றால் என்ன?

இரைப்பை, தொண்டை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தசையைப் பிரித்தல். இதய வலிப்பின் பொழுது விழுங்க இயலாமை ஏற்படும். இப்பொழுது இந்த அறுவை செய்யப்படும்.

16. குருதியிலா அறுவை என்றால் என்ன?

குருதி சிந்தாமல் நடைபெறுவது. புறத்துறுப்பில் செய்யும் பொழுது, அறுவை செய்யப்படும் இடத்திலிருந்து, உறுப்பு உயர்த்தி வெளியேற்றப்படும். இதற்கு நீட்சியுள்ள ஒரு கட்டு, புற உறுப்பில் போடப்படும்.

17. பினேலாக் அறுவை என்றால் என்ன?

நுரையீரல் தமனியுடன் காறை எலும்புக் கீழ்த்தமனி இணைக்கப்படுதல். பிறவி நுரையீரல் குறுக்கம் ஏற்படும் பொழுது இவ்வறுவை நடைபெறும்.

18. ஆல்பி அறுவை என்றால் என்ன?

1. பிளாஸ்டிக் அறுவை மூலம் இடுப்பு மூட்டைப் புழக்கம் ஏற்படுமாறு செய்தல். 2. என்புருக்கி நோயாளியின் முள்ளலும்போடு சேர்க்க ஒட்டு, கீழ்க்கால் உள்ளெலும்பிலிருந்து எடுக்கப்படுதல்.

19. சீசர் அறுவை என்றால் என்ன?

இயல்பாகப் பிள்ளை பெற முடியாத பெண்களுக்குச் செய்யப்படுவது. வயிற்றில் செய்யப்படும் திறப்பினால் குழந்தை வெளிக்கொண்டு வரப்படும். உரோம் மாமன்னன் சீசர் இப்படிப் பிறந்ததால், இதற்கு அவர் பெயர் வரலாயிற்று.

20. குளிர் அறுவை என்றால் என்ன?

பிரிந்த விழித்திரையை மாற்றீடு செய்தல், கண்புரை ஆய்வில் விழிவில்லையை நீக்கல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் உறை நிலை.