பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


8. மருத்துவக்கருவிகள்

1. மார்பாய்வி என்றால் என்ன?
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் நிலைமையினைத் தெரிவிக்கும் கருவி. இவ்வுறுப்புகளின் அசைவுகள் ஒலி துடிப்புகளாக இக்கருவியில் உணரப்படும். இதைப் புனைந்தவர் வில்லியம் ஸ்டோக்ஸ் (1804–1878)

2. அலை வரைலி என்றால் என்ன?
குருதியழுத்தம், இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கங்களைப் பதிவு செய்யுங் கருவி.

3. கண்ணோக்கி என்றால் என்ன?
வில்லை பொருத்தப்பட்ட சிறிய கருவி. கண்ணின் உட்பகுதியை ஆராயப் பயன்படுவது.

4. கண்ணளவுமானி என்றால் என்ன?
கண்ணின் உள் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி.

5. பெட்ரிகிண்ணம் என்றால் என்ன?
சிறிய தட்டையான கண்ணாடிக் கிண்ணம், நுண்ணுயிரி ஆய்வகங்களில் நுண்ணுயிரிகளை வளர்க்கப் பயன்படுவது.

6. போலிட்சர் பை என்றால் என்ன?
இது ரப்பராலான பை. நீள் குழாய் உள்ளது. மூக்கு மற்றும் நடுச்செவிக் குழல் வழியாக நடுச்செவிக்குக் காற்றுச் செலுத்தப் பயன்படுவது.

7. பரப்பும் கத்தி என்றால் என்ன?
தட்டையாகவும் நெகிழும் தன்மையும் கொண்ட, மழுமழுப்பான கத்தி. களிம்பைப் பரப்பப் பயன்படுவது.

8. கர்சனர் கம்பி என்றால் என்ன?
முடநீக்கியல் அறுவையில் பயன்படும் கம்பி. முறிவுற்ற எலும்பிற்கு எலும்பு இழுப்பு அளிக்க உதவுவது.

9. கெகர் விரிப்பிகள் என்றால் என்ன?

இவை உலோக நக உளிகள். அளவிடப்பட்டிருக்கும். கருப்பை, அதன் கழுத்து ஆகியவற்றை விரிக்கப் பயன்படுபவை.