பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


தமனியிலிருந்து சிவந்த இரத்தம் துள்ளித்துள்ளி வரும். சிரையிலிருந்து கரிய இரத்தம் ஒரே சீராகவரும். புண்ணிலிருந்து வடிவது தந்துகி இரத்தம்.

143. இதன் வகைகள் யாவை?

1. முதல் நிலைக் கசிவு - காயம்படும்பொழுது வெளி வருவது. 2. பின் கசிவு - குருதியழுத்தத்தால் காயம்பட்ட 24 மணி நேரத்திற்குப் பின் வருவது. 3. இரண்டாம் நிலைக் கசிவு - காயம் ஏற்பட்ட 7-10 நாட்களுக்குள் புரையோடுவதால் வருவது.

144. குருதிக்கசிவோர் என்பவர் யார்?

குருதி உறையாமை நோயினால் வருந்துபவர். இவர் களுக்கு அடிக்கடி குருதிக் கசிவு ஏற்படும்.

145. பார்க்க இயலாத கசிவின் அறிகுறிகள் யாவை?

உடல் குழிக்குள் இருப்பது. தோல் வெளுத்தல், விரைந்த மூச்சு, நலிவான நாடித்துடிப்பு, படபடப்பு, குறைந்த வெப்பநிலை, குளிர்ச்சி, வியர்த்தல், சிதைவு.

146. அழுத்தமுனைகள் என்றால் என்ன?

குருதிக் கசிவை நிறுத்த அழுத்தம் செலுத்தப்படும் இடங்கள்.

7. கொலாஸ்டிரால்

147. கொலாஸ்டிரால் என்றால் என்ன?

கொழுப்பிலிருந்து பெறப்படும் வெண்ணிறப் பொருள். மனிதத் திசுக்களில் காணப்படுவது. பல உயிர்ப்புச் செயல்களுக்குக் காரணம். இது உடலில் அதிகமானால் மாரடைப்பு, இதயத் தமனிக்குழாய் அடைப்பு ஏற்படும்.

148. குருதியிலுள்ள கொலாஸ்டிராலின் வகைகள் யாவை?

1. மொத்தக் கொலஸ்டிரால்.
2. குறையடர்த்திக் கொழுப்புப் புரதக் கொலாஸ்டிரால்.
3. மீயடர்த்திக் கொழுப்புப் புரதக் கொலஸ்டிரால்.
4. மிகுகுறை அடர்த்திக் கொழுப்புப் புரதக் கொலாஸ்டிரால்.