இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47
2. சுழல் மண்டலம்
30. சுழல் மண்டலம் என்றால் என்ன?
- குருதிக்குழாய் மண்டலம். இதயமும் குருதிக் குழாய்களும் கொண்டது. குருதி மூலம் உணவுப் பொருள்கள் உடலின் பல பகுதிகளுக்கும் செல்லுதல்.
31. இதயம் என்பது என்ன?
- உட்குழிவான தசை உறுப்பு. குருதியை உடல் முழுதும் செலுத்துவது.
32. இதயம் எங்கு அமைந்துள்ளது?
- மார்பில் நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது.
33. நம் உடலிலுள்ள பெரிய தமனி எது?
- பெருந்தமனி.
34. நம் உடலிலுள்ள இரு பெரும்சிரைகள் யாவை?
- கீழ்ப்பெருஞ்சிரை, மேற்பெருஞ்சிரை.
35. நிணநீர்க் குழாய்களில் பெரியது எது?
- மார்பு நிணநீர் நாளம்.
36. மூவகைக் குருதிக் குழாய்கள் யாவை?
- தமனிகள், சிரைகள், தந்துகிகள்.
37. பெருந்தமனி என்பது யாது?
- நம் உடலிலுள்ள பெருங் குருதிக்குழாய், பல தமனிகளாகப் பிரிந்து குருதியினை இதயத்திலிருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது.
38. உயிர்வளியுள்ள குருதியைக் கொண்டு செல்லும் ஒரு குருதிக் குழாய் எது?
- நுரையீரல் சிரை.
39. கரி இரு ஆக்சைடு உள்ள குருதியைக் கொண்டு செல்லும் ஒரு தமனி எது?
- நுரையீரல் தமனி.
40. சிரைகளில் திறப்பிகள் உள்ளன. தமனிகளில் இல்லை ஏன்?
- சிரைகளில் அழுத்தம் குறைவு. ஆகவே, திறப்பிகள் உள்ளன. தமனிகளில் அழுத்தம் அதிகம். ஆகவே, திறப்பிகள் இல்லை.