பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


நுரையீரல்கள், மூச்சுக்குழல்கள் ஆகியவை அடங்கியது. மூச்சுவிட உதவுவது முதன்மையான வேலை.

144. நுரையீரல்கள் என்பவை யாவை?

காற்றினால் மூச்சுவிடும் உயிர்களுக்கான மூச்சுறுப்புகள். பொதுவாக இவை இரண்டு. இவற்றின் இறுதிப் பகுதிகள் மூச்சுச் சிற்றறைகள். இவற்றில் வளிமாற்றம் நடைபெறுகிறது.

145. மூச்சுச்சிற்றறை என்றால் என்ன?

நுரையீரலில் உள்ள சிறிய அறைகள். இங்குத்தான் வளி மாற்றம் நடைபெறுகிறது.

146. மூச்சுவிடுதல் என்றால் என்ன?

காற்றை உள்ளிழுத்து வெளிவிடுதல் ஆகும். வெளி மூச்சில் கரி இரு ஆக்சைடு வெளிச் செல்லுகிறது, உள் மூச்சில் வெளியிலிருந்து உயிர்வளி உள்வருகிறது. இது திசுக்களுக்குச் செல்லும் பொழுது அங்கு ஆக்சிஜன் ஏற்றம் நடைபெறுகிறது.

147. மூச்சு ஈவு என்றால் என்ன?

மூச்சுவிடுதலின் பொழுது செலவழிந்த உயிர்வளிப் பருமனுக்கும் உண்டாகும் கரி இரு ஆக்சைடு பருமனுக்கு முள்ள வீதம். வழக்கமாக இது 0.8 என்றும் அளவில் இருக்கும்.

148. குரல்வளை மணி என்றால் என்ன?

ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பில் உண்டாவது. இது பெண்களுக்கு இல்லை.

149. மூச்சடைப்பு என்றால் என்ன?

புகை, நெடி முதலியவற்றால் மூச்சில் தடை ஏற்படுதல்.

7. கழிவு மண்டலம்

150. கழிவு மண்டலம் என்றால் என்ன?

தோல், சிறுநீரகம் ஆகிய கழிவுறுப்புகளைக் கொண்ட தொகுதி. முதன்மையான வேலை கழிவு அகற்றல்.