பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


கொழுப்பு செரிக்க உதவுகிறது.

240. கணையத்தின் இரட்டைச் சிறப்பென்ன?

இது கணைய நீரையும் இன்சுலினையும் சுரக்கிறது. முன்னது மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியவற்றைச் செரிக்கச் வைப்பது. பின்னது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது. இச்சுரப்பி நாளமுள்ள சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி ஆகிய இரண்டிற்கும் எடுத்துக்காட்டு.

241. மண்ணீரல் என்றால் என்ன?

இரைப்பையின் மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு.

242. இதன் வேலைகள் யாவை?

1. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது.
2. வெள்ளணுக்களை உற்பத்தி செய்கிறது.

243. நாளமுள்ள இரு கழிவுநீர்ச் சுரப்பிகள் யாவை?

வியர்வைச் சுரப்பிகள், சிறுநீரகங்கள்.

10. இனப்பெருக்க மண்டலம்

244. இனப்பெருக்க மண்டலம் என்றால் என்ன?

இனப்பெருக்கத்திற்குரிய ஆண் உறுப்புகளும் பெண் உறுப்புகளும் உள்ள தொகுதி. இவை மனிதனிடம் நன்கு வளர்ந்துள்ளன.

245. இனப்பெருக்கம் என்றால் என்ன?

விந்தணு கருமுட்டையோடு சேர்ந்து கருவணு உருவாகிறது. இதிலிருந்து புதிய உயிர் உருவாகிறது. இச்செயலே இனப்பெருக்கம் ஆகும். உயிர் இனங்கள் தொடர்ந்து சென்று நிலைத்திருக்க இது மிக இன்றியமையாதது.

246. இனப்பெருக்கம் எத்தனை வகைப்படும்?

1. கலவி இனப்பெருக்கம் - விந்தணு கருவணு மூலம் நடைபெறுவது.
2. கலவியிலா இனப்பெருக்கம் - பிளவுபடல், துண்டாதல் மூலம் நடைபெறுதல்.