பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

13




தம்பி! கவனி!

சுறுசுறுப்பாயிரு! ஆனால், படபடப்பாயிராதே!
பொறுமையாயிரு! ஆனால், சோம்பேறியாயிராதே!
பற்றற்று இரு! ஆனால், காட்டுக்குப் போய்விடாதே!
இல்லறத்தை நடத்து! ஆனால், காமவெறியனாயிராதே!

வீரனாயிரு! ஆனால், போக்கிரியாயிராதே!
அன்பாயிரு! ஆனால், அடிமையாயிராதே!
கொடையாளியாயிரு! ஆனால், ஒட்டாண்டியாய் விடாதே!

சிக்கனமாயிரு! ஆனால், கருமியாயிராதே;
இரக்கம் காட்டு! ஆனால், ஏமாறிப் போகாதே!

தொண்டர் நிலை

பிறர் தூற்றுவதைக் கண்டு நடுங்குகின்ற பொதுத் தொண்டனால் நாட்டுக்குத் தீமை விளையும்.

அதைவிட அதிகத் தீமை, பிறர் வாழ்த்துவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்ற பொதுத்தொண்டனால் நாட்டுக்கு ஏற்பட்டுவிடும்.

மணவாழ்க்கை

உப்பில்லாப் பத்தியம் இருப்பவன் உப்பை எவ்வளவு பெரிதாகக் கருதுகிறானோ, அப்படியே திருமணமாகாத இளைஞன் திருமணவாழ்வைக் கருதுகிறான்.

உப்பைக் கலந்துண்பவன் உப்பை எவ்வளவு சிறிதாகக் கருதுகிறானோ, அப்படியே மணமுடித்த பிறகு அவன் மன வாழ்க்கையைக் கருதுகிறான்.

வாழ்க்கை

பிறர் அடைகின்ற மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடையப் பழகு. அதுதான் உண்மையான மகிழ்ச்சியாகும். அதுமட்டு மன்று; அத்தகைய மகிழ்ச்சி ஒன்றுதான் உனது வாழ்க்கையை அழகு செய்யும்.