பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
அறிவுக்கு உணவு
 


நீ யார்?

நீ யார் என்பதைப் பிறருக்குஅறிவிப்பது உனது பேச்சே! ஆகவே, நீ பேசும்போது விழிப்பாயிருந்து பேசிப் பிறரை ஏமாற்றிவிடலாம் என ஒருபோதும் எண்ணிவிடாதே. அதனால் நீயே ஏமாறுவாய்!

உள்ளம் தூய்மையாய் இருந்தால்தான் பேச்சுத் தெளிவாய் இருக்கும். பேச்சுத் தெளிவாய் இருந்தால்தான் நீ நேர்மையானவனாய் இருப்பாய்.

இன்பமும் துன்பமும்

வாழ்வைப்பற்றி எண்ணும்போது இன்பமும், சாவைப்பற்றி எண்ணும்போது துன்பமும் உண்டாகின்றன. ஆனால், மனிதன் சாவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாவம்! அவனது கவலையெல்லாம் வாழ்வைப் பற்றியதாகவே இருந்து வருகிறது.

திருந்துங்கள்

பஞ்சு மெத்தைகளில் நடைபெறும் கொடுமைகளைப் போலத் தாழம் பாய்களில் நடப்பதாக அறிய இயலவில்லை. சிறு குடிசைகளில் கேட்கப்படுகின்ற அன்புச்சொற்களைப் போலச் சிங்கார மாளிகைகளில் கேட்க இயலுவதில்லை.‘குணம் பெற்றால், பணம் விலகும்’ என்பதும், ‘பணம் பெற்றால், குணம் விலகும்’ என்பதும், பத்தில் ஒன்பது பங்கு உண்மை போலும்!

புரட்சி ஒங்குக!

‘புரட்சி, புரட்சி’ என்று படிக்கிறோம். கேட்கிறோம், பார்க்கிறோம். அது வேறு எங்கும் உண்டாவதைவிட, நம்நாட்டு மக்களுடைய உள்ளத்திலேயே உண்டாக வேண்டும்.

மனப்புரட்சி ஏற்பட்டுத் திருந்தினாலன்றி, வாழ வழியில்லை. ஆகவே, எங்கும் புரட்சி ஒங்குக! என்பதைவிட முதலில், ‘மனப்புரட்சி ஒங்குக’ என்ற கூறுவது பெருநலம் பயக்கும்.

வாங்க மனமானால் கொடு!

பிறரிடத்தில் நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதையே நீ பிறருக்குக் கொடு!