பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அறிவுக்கு உணவு



இளைஞர்கள்

சின்னஞ் சிறு குழந்தைகளையும், வயதுசென்ற பெரியவர் களையும் காளைகளாகிய இளைஞர்கள் சிறிதும் பொருட்படுத்து வதில்லை. இது இளந்தளிர்களையும், உதிர்ந்த சருகுகளையும் கண்டு மரத்திலுள்ள பச்சை இலைகள் தம் நிலை குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்வதைப் போன்றது.


குறை கூறுதல்

ஒருவன் எவ்வளவு உயர்ந்த குணம் உடையவனாய் இருந் தாலும், பிறரைக் குறைகூறும் குணம் ஒன்று இருக்குமானால், அவன் உயிரோடு இருக்கும் பொழுதே இறந்தவனாய் விடுவான்.


வலிமை

வாலிபன் கை வாளைவிட, வயது சென்ற மக்களின் எண்ணத்திற்கு அகிகவலிமையுண்டு. அது ஆக்கவும் அழிக்கவும் வல்லது.


ஒற்றுமை

மண்ணிற் பிறந்த பொன்னும், மலையிற் பிறந்த மணியும், கடலிற் பிறந்த முத்தும் ஒன்றுசேர்ந்து மாலையாய்த் திகழ்ந்து ஒளிவீசுகின்றன. இம் மாலையைத் தங்கள் கழுத்தில் அணிந்து வாழும் மக்கள், ஒரு குடியிற் பிறந்தும் ஒன்றுசேர்ந்து வாழ மறுப்பது எதன் பொருட்டோ?


என்ன பெயர்?

தண்ணிர் ஊற்றி வளர்த்தவனுக்குப் பின் பலன் தராமல் வளைந்து சென்று, வேலிக்கு வெளியே தலையை நீட்டித் தேங்காயையும் மட்டையையும் வருவார்க்கும் போவார்க்கும் கொட்டி உதவுகிற தென்னை மரத்தை, அறிஞர் ‘முடத்தெங்கு’ என்பர். ஆனால், பெற்ற நாட்டையும் வளர்த்த மொழியையும் மறந்து, பிற நாட்டிற்கும் பிறமொழிக்கும் தொண்டு செய்கிற மக்களுக்கு என்ன பெயர் இடுவது?