பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

33



வள்ளுவர்

மடாதிபதிகளுள் பலர் துறவியர். இளங்கோவும், தொல்காப்பியரும் துறவியரும், புலவரும் ஆவர். பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கர் ஆகிய மூவரும் துறவியரும் புலவரும் ஞானியரும் ஆவர். திருப்பராய்த்துறை சித்பவனாந்த அடிகளைப் போன்றவர், துறவியரும். புலவரும் ஞானியரும் தொண்டரும் ஆவர். ஆனால், வள்ளுவரோ, துறவியர், புலவர் ஞானியர், தொண்டர் மட்டுமல்லர்; வாழ்ந்து, வாழ வழிவகுத்துத் தந்த இல்லறத்தாரும் ஆவர்.


உலகம் உருண்டை

இன்பத்தின் முடிவு துன்பம். துன்பத்தின் முடிவு இன்பம். இரவின் முடிவு பகல், பகலின் முடிவு இரவு. இனிப்பின் முடிவு புளிப்பு: புளிப்பின் முடிவு இனிப்பு. அடிமையின் முடிவு விடுதலை; விடுதலையின் முடிவு அடிமை, இறுதியின் முடிவு தொடக்கம்; தொடக்கத்தின் முடிவு இறுதி, ஆம்; வாழ்வே ஒரு வட்டம்.


ஏரி நீர்

அலையில்லாத ஏரி நீரைப்போன்ற உள்ளமுடைய நரைத்துப் பழுத்த பெரியவர்களின் மனத்தை நீ ஒரு போதும் புண்படுத்தாதே! அவர்களின் வசை மொழியானது கரை உடைத்த ஏரி நீர் ஊரைத் தாக்கி அழிப்பது போல, உன்னைத் தாக்கி அழிக்கும் வன்மையை உடையது.


கண்டுபிடி

உன் நண்பர்களுள் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்வதைவிட நீ யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்வது நல்லது.


துன்பங்கள்

கடன் வாங்கிச் சொத்துக்களை வாங்குகிறவனைவிட கடன் இருக்கும்போது மேலும் சொத்துக்களை வாங்குகிறவன் பெருந்துன்பங்களை அடைகிறான்.