பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி.ஆ. பெ. விசுவநாதம்
35
 


நினைத்துப் பார்

பொதுத்தொண்டு செய்ய எண்ணித் தேர்தலுக்கு நின்று பெரும் பொருளைச் செலவு செய்யும் ஒருவனுக்கு, “அப்பொருளில் ஏழில் ஒரு பங்கைக் கொண்டு எவ்வளவோ பொதுத்தொண்டு செய்யலாமே!” என்ற எண்ணம் ஏன் உண் டாவதில்லை என்பதை, அவன் நினைத்துப் பார்க்காவிட் டாலும், நீயாவது நினைத்துப் பார்,


குறைத்துக் கொள்

செயலில் சிறிதளவாவது செய்ய முயற்சி செய். இயலாவிடில், பேச்சையாவது குறைத்துக் கொள். அதுவும் இயலாவிடில், உன்னால் எதுவுமே செய்ய இயலாது.


நலமும் தீதும்

தாழ்ந்தவர்களை உணர்த்த எண்ணுவது உனக்கும் நல்லது. பிறர்க்கும் நல்லது. உயர்ந்தவர்களைத் தாழ்த்த எண்ணுவது உனக்கும் தீது, உலகுக்கும் தீது.


அழிவை நெருங்கும்

பட்டத்தை நினைத்தோ, பதவியை எண்ணியோ, பொருளை விரும்பியோ, புகழைக் கருதியோ, பொதுத்தொண்டு செய்யப் புறப்படுகின்ற மக்களைப் பெருக்கி வரும் நாடு, அழிவை நெருங்கிக் கொண்டேயிருக்கும்.


உயர்வும் தாழ்வும்

பிறரை உயர்வாகக் கருதிக் கொண்டிருப்பவன், தானும் உயர்ந்து கொண்டே இருக்கிறான். பிறரைத் தாழ்வாகக் கருதிக் கொண்டிருப்பவன், தானும் தாழ்ந்து கொண்டேயிருக்கிறான். நினைப்புத்தான் செயலில் காணப்படுகின்றது.


ஊர் கெடும்

வயிற்றுப் பிழைப்பைக் கருதி எதுவும் செய்ய எண்ணும் தீயர் பலர் இருப்பினும் ஊர் கெட்டுவிடாது; நல்லறிஞர் அவ்வூரில் இரண்டொருவரேனும் இல்லாதிருந்தால்தான் கெட்டுவிடும்.