பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் M.A., M.O.L., Ph.D.
(தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்)


சிறு வடிவம்; சிறந்த கருத்துக்கள்; நூலின் தன்மை அத்தகையது.

தெறிக்கும் சொற்கள், தெளிவான நல்லுரைகள்; ஆசிரியரின் நடை இத்தகையது.

தமிழகம் உயர வேண்டும்! தமிழர் உயர்ந்தால்தான் அது முடியும்; கருத்துக்களின் குறிக்கோள் இது.

கற்பனையுலகத்தை நடைமுறைக்கு ஈர்த்து அலைவதும் இங்கு இல்லை. பழைய வரலாற்றை இன்றைய வாழ்வுக்குப் பாய்ச்சி இணைப்பதும் இங்கு இல்லை. நடைமுறையை மறவாமல் வாழ்வைக் காக்கும் அனுபவ அறிவுரையே இங்கு உள்ளது.

வினாவும் விடையுமாக உள்ள பகுதிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுரைகளாக உள்ளன. விடைகூறும் முறை சுவை மிகுந்ததாகவும், நேரே உள்ளத்தில் பதிய வல்லதாகவும், உள்ளது. ஏட்டுச் சுரைக்காயாக வரும் அறிவுரையை விட, அனுபவத் தெளிவாக வரும் அறிவுரை ஆற்றல் மிகுந்தது என்பதை இந்தப் பகுதியால் நன்கு தெளியலாம். இவை இளைஞர் உள்ளங்களுக்கு நல்ல மருந்தும் ஆவன: சிறந்த விருந்தும் ஆவன.

‘அறிவுக்கு உணவு’ நலம் பயப்பதாக!

அன்புள்ள,
மு.வரதாரசன்

சென்னை
12-9-56