பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அறிவுக்கு உணவு



கே: நீங்கள் உலக சமாதானத்திற்கு வழி காட்டுவீர்களா?

வி:உலக அமைதிக்குப் பங்கம் விளைவிப்பன இரண்டே அவை பிறரது கருத்தை அறிய மறுப்பதும், பிறரது தேவையை உணர மறுப்பதுமேயாகும். இதனை அறிந்து கொண்டால் உலக அமைதிக்குப் பங்கம் ஏற்படாது. இதனை போர்க்குணம்படைத்த நாடுகள் உணரவேண்டும். உலக சமாதானத்திற்குரிய ஒரே வழி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத்தன்மையுமே ஆகும்.

கே: சுயநலம் குற்றமா, குணமா?

வி:பிறர் நலம் தன்னலத்திலிருந்து தோன்றுவதுதான். தன்னலம் ஒருபோதும் குற்றமாகாது. ஆனால், அது பிறரைப் பாதிக்கா மலிருக்கவேண்டும். பிறரைப் பாதித்து வஞ்சித்து அடைகின்ற தன்னலந்தான் நஞ்சு கலந்ததாகும்.

கே: குழந்தைகளை அடித்து வளர்ப்பது நல்லதா? அடிக்காமல் வளர்ப்பது நல்லதா?

வி: மிரட்டி வளர்ப்பது நல்லது. எல்லாவற்றையும் விட அதிகம் நல்லது, அதை நல்ல பிள்ளை', 'நல்ல பிள்ளை' எனச் சொல்லி, 'தவறு செய்தால், கெட்டபிள்ளையெனச் சொல்லிவிடுவார்கள் எனப் பயமுறுத்தி வளர்ப்பது. குழந்தைகள் செய்யும் சிறிய குற்றங்களைப் பெரியனவாகக் குழந்தைகளிடம் காட்டவேண்டும். அதுவே தவறு என்று உணர்ந்த பெரிய குற்றங்களை அணைத்துக் கொண்டு, ‘இனி அப்படிச் செய்யாதே' எனச் சொல்லிவிட்டுவிட வேண்டும். இந்த முறை பிள்ளைகளின் அறிவை ஆற்றலை வளர்ப்பதற்குப் பெருந்துணை செய்யும்.

கே: தமிழ்நாடு முன்னேறத் தொடங்குவது எப்போது?

வி:அது,

'தமிழ்க்கு என்று ஒர் அமைப்பும்,
'தமிழனுக்கு என்று ஒர் அமைப்பும்,
தமிழகத்திற்கு என்று ஒர் அமைப்பும்,
அமைக்கத் தமிழ் மக்கள் முன்வரும்போது!