பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிவுக்கு உணவு


சிந்தனைச் செல்வம்


ஓயாது பேசிக்கொண்டிருப்பவன் தன் உள்ளத்தில் ஒன்றும் இல்லையென்பதைக் காட்டிக் கொள்ளுகிறான்.

ஒன்றுமே பேசாதிருப்பவன் தன்னுள்ளத்தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டி விடுகின்றான்.

முன்னவனை ஒட்டைவாயன் என்றும் பின்னவனை அறிஞன் என்றும் கூறுகிறவன், தன் அவசர புத்தியைக் காட்டிக் கொள்ளுகிறான்.

முன்னவனை நல்லவன் என்றும், பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுகிறவன், தான் அவனைவிட அவசரக்காரன் என்பதைக் காட்டிக்கொள்ளுகிறான்.

இந்நால்வரும் சிந்தனைச் செல்வத்தை இழந்துவிட்டவர் என்பது அறிஞரின் முடிவு.

ஏமாற்றம்

யோக்கியன் தன்னைப் போலவே பிறரும் யோக்கியராய் இருப்பார் என எண்ணி ஏமாறிக் கெட்டுப் போகிறான்.

அயோக்கியனும் தன்னைப் போலவே மற்றவர்கள் அயோக்கியர்களாய் இருப்பார்களென எண்ணி ஏமாற்றிக் கெட்டுப்போகிறான்.

துன்பம்

சோம்பேறிகளுக்கு இடையில் சுறுசுறுப்பாய் இருப்பவரும், பொய்யர்களுக்கு இடையில் உண்மை பேசி வருபவரும், அயோக்கியர்களுக்கு இடையில் வாழ்கின்ற அறிஞர்களைவிட மிகுந்த துன்பத்தை அனுபவிப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்கு_உணவு.pdf/9&oldid=1072418" இலிருந்து மீள்விக்கப்பட்டது