பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வப் பரணி

9




கொன்ற தேவிமார்களின் அணிகளிலுள்ள இரத்தினங்கள் கோவிலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. சேனாவீரர்களின் கொழுப்பாகிய சேற்றை அவர்களின் உதிரமாகிய நீரால் குழைத்து அவர்களின் தலைகளைக் கொண்டு சுவர் எழுப்பப்பெற்றுள்ளது. மாற்றரசர்களின் காவற்காடுகளிலுள்ள மரங்கள்தாம் தூண்களாகவும் உத்திரங்களாகவும் அமைந்துள்ளன. யானையின் கொம்புகள் அரிச்சந்திரக் கால்களாகவும், அவற்றின் விலாஎலும்புகள் கைமரங்களாகவும், பகைவேந்தர்களின் கொடிகள் மேல்முகட்டின் கூடல்வாய்களாகவும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. யானைகளின் முகபடாங்கள் கூரையாக அமைக்கப்பெற்றுள்ளன. மதிற்சுவர்களும் கோபுரமும் எலும்புகளால் அமைந்துள்ளன.கோவிலுக்கு முன்னால் இரண்டு இருப்புத்தூண்கள் நடப்பெற்று அவற்றின் மீது ஓர் இரும்பை வளைத்து மகரதோரணமாக அமைக்கப்பெற்றுள்ளது. மயில்களின் தலைகள், மலர்ந்த முகத்துடனுள்ள வீரர்களின் தலைகள், நிணத்தாலாகிய கொடிகள், பால் மணம் மாறாத பச்சிளங் குழவிகளின் தலைகள் ஆகியவை கோவிலின் எல்லா இடங்களிலும் தொங்க விடப்பெற்றுள்ளன.

இத்தகைய கோயிலில் வீற்றிருக்கும் காளியின் உருவம் பயங்கரமாகச் சித்திரிக்கப்பெறுகின்றது. ஒவ்வொரு உறுப்புக்களையும் வருணித்தபின் அவளது பேருருவச் சிறப்பினை,

அண்டமுறு குலகிரிகள்
அவளொருகால் இருகாதில்
கொண்டணியின் குதம்பையுமாம்
கோத்தணியின் மணிவடமாம்.

[அண்டம்-உலகம்; கிரி-மலை; குதம்பை, காதோலை; வடம்-மாலை]