பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

அழைத்துச் சென்று ஒரு வீட்டு மாடியில் விருந்து படைத்தது. வயிறார உண்ட நரி, முன்பு பூனை செய்ததைப் போல்பாட ஆரம்பித்தது.

அதைக்கண்டு பயந்த பூனை, “பாடாதே! பாடினால் நம் இருவருக்கும் ஆபத்து” என்று சொல்லியும் கேளாமல் நரி ஊளையிடவே, வீட்டுக்காரர் வந்து உலக்கையால் தாக்கி, நரியைக் கொன்று குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார். பூனை தப்பி ஓடிவிட்டது.

காட்டில் தம் நண்பனைக் காணாத நரிகள் ஒன்றுகூடி இந்த நரியைத் தேடி வந்தன. செய்தியைக் கேள்விப் பட்டுக் குப்பைத் தொட்டியில் கிடந்த நரியின் பிணத்தைக் கண்டு அழுதன: அலறின.

அவற்றுள் வயதான கிழ நரி ஒன்று, “நாம் இனி அழுது என்ன பயன்? இது எப்படி நடந்தது. என்று சிந்திக்க வேண்டாமா?” என்றது. அப்போது ஒரு நரி “ஆமாம், கூடாதாருடன் கூடலாமா?” என்றது. மற்றொரு நரி கேட்டது “கூடாதாருடன் கூடினாலும் கூடங்கள் மாடங்கள் ஏறலாமா?” என்று. மூன்றாவது நரி “கூடங்கள் மாடங்கள் ஏறினாலும் இராகங்கள் சங்கீதங்கள் இழுக்கலாமா” என்றது. கடைசியாகக் கிழநரி “ராகங்கள் சங்கீதங்கள் இழுத்ததனால்தான் தாளங்கள் தப்புகள் நடந்துள்ளன” என்று கூறியது.

இப்போது எல்லா நரிகளும் உண்மையை உணர்ந்து, “நாமும் இப்படிப் போனால் நம் கதியும் இப்படித்தான் முடியும்” என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, காட்டை நோக்கி ஒட்டம் பிடித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/47&oldid=962669" இலிருந்து மீள்விக்கப்பட்டது