பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31. இளந் துறவியும் முதிய துறவியும்

முதிய துறவி ஒருவர், இளந்துறவி ஒருவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

வழியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, இவர்களுக்கு முன்னே இளம்பெண் ஒருத்தி, இரண்டுமாதக் கைக்குழந்தையுடன், செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து அக்கரை போகாவிட்டால், கணவனும் மாமியாரும் சண்டையிடுவார்கள். திரும்பித் தாய் வீட்டுக்குப் போகலாம் என்றாலோ ஒரே இருட்டு; காட்டு வழிப்பாதை. ஆற்றைக் கடக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் வழியில்லாமல் அவள் துடித்துக் கொண்டிருந்தாள்.

இந்தத் துறவிகள் இருவரையும் அந்த நேரத்தில் அங்கே கண்டதும், அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயம் அவர்கள் உதவி செய்வார்கள் என்று, நம்பினாள்.

முதிய துறவியோ, இளம்பெண்ணைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி ஆற்றிலே இறங்கி நடக்கத் தொடங்கி விட்டார். இதைக் கண்டதும், அவளுக்கு ஒரே நடுக்கமாகப் போய்விட்டது.

அவளது துயரத்தைக் கண்ட இளம்துறவி, அவள்மீது இரக்கம்கொண்டு, ‘அம்மா குழந்தையை நீ உன் தோளில் பத்திரமாக வைத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு, அப்படியே அவளைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்து, அக்கரை போய்ச் சேர்ந்த உடன் அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/60&oldid=962684" இலிருந்து மீள்விக்கப்பட்டது