பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

113



622.அடுத்த வீட்டுக்காரனுடைய குறைகளை அம்பலப்படுத்த ஆசையாயுள்ள தினவுக்கு மருந்துமில்லை, மந்திரமுமில்லை.

ஹார்வி

623.அவதூறு வாளினும் அதிகமான கூர்மையும், நாகத்தினும் அதிகமான விஷமும் உடையது. அது மூச்சு விட்டால் போதும், அரைக்கணத்தில் அகிலலோகமும் பரவிடும்.

ஷேக்ஸ்பியர்

624.ஒரு மணி நேரம்கூட நாம் ஒருவர்க்கொருவர் அன்பாயிருக்க முடியவில்லை. சகோதரன் தவறு கண்டால் அதைப் பிறரிடம் ஊதுகிறோம், சாடை காட்டுகிறோம், நகைக்கிறோம், இளிக்கிறோம்—எவ்வளவுதான் நாம் நம் பெருமையைத் தூக்கி நிறுத்தினாலும் நாம் மனிதர்கள் ஒரு அற்பமான ஜாதியே.

டெனிஸன்


27.சிரிப்பு

625.எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது.

கதே