இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்மிடற் றேயரிந் தூற்றும்
இரத்தம் அகலிலிட் டெண்ணெய்
இன்மையால் ஏற்றுவன் தீபம்
என்றறுத் திடுதலும் ஈசன்
தன்கரத் தாற் றடை செய்து
தண்ணருள் காட்டிடப் பெற்ற
தன்ம நிலையர் கலியர்
தாண்மலர்க் கன்புசெய் வாமே.
கடிமலர்க் கொன்றை காதல்செய் தேவின்
அடியரை இகழ்வோர் அவர்கள்தம் நாவைத்
துடிதுடித் தறுக்குத் தொண்டுசெய் சத்தி
அடிகள்தம் அடிகள் அடியனுக் கரணே.
எண்பாவும் ஈசன் அமர்ந்தருள் இடமதெலாம்
பண்பாவும் அன்புடன் நாடிப் பரவியுமே
வெண்பாக்கள் பாடி விளங்கிய ஐயடிகள்
நண்பாருங் காடவர் கோன்கழல் நாடுவமே.
மிடிகொள் நிலையில் விளக்கேற்றுந் தொண்டு
முடிகொள்ளா வாறங்கு முன்னி முடியை
வடிகொள் விளக்காக மன்ற *எரி பத்தி
குடிகொள் கணம்புல்லர் கோலந் துதித்திடுவாம்.
எரி-எரித்த-வினைத்தொகை.