பொய் வேடத்தையும் மெய் வேடமாகக் கருதி உய்ந்த மெய் உணர்வு மிக்கவரும், 'தத்தா நமர் 'என்று கொலைஞனையும் தமராகப் பாவித்துக் காத்த வருமான மெய்ப்பொருள் நாயனாரது சீரைப் பாராட்டி மகிழ்வாம்.
அடியாரை வணங்காத ஆரூரன் புறகே, அவன் நாடுகின்ற ஆரூர்ப் பெருமானும் புறகே - என வன்மை பேசின பெரும் பக்திச் சீராளரும், திருத்தொண்டர் தொகையை ஆரூரர் பாடுதற்கு மூல காாணராயிருந்தவருமான செங்குன்றூர் விறன்மிண்டர் வாழ்வாராக.
"ஈரக் கோவணத்துடன் நிற்கின்றேன். நான் உமதிடம் கொடுத்த கோவணத்தைக் கொடு" என்று கேட்க, அக் கோவனத்தைக் காணமாட்டாது தடுமாறின போது, 'நான் தந்த கோவணத்தின் எடைக்கு நேரான பொருளையாவது தா'என்று கேட்க, மனைவியும் மகவும் தாமுமாகத் தராசில் ஏறித் தலையை நேர் நிறுத்தின அமர்நீதியாரின் அறிவை ஏத்துவாம்.
சிவகாமி ஆண்டார் என்னும் சிவனடியாரது மலர்க்கூடையைப் பற்றி எறிந்த வலிய ஆனையை அட்ட அதிவீரரும், அடியார்க்குத் துணை புரிவதையே தமது கடமையாகக் கொண்டவருழான எறிபத்த நாயனாரது கழளை ஏத்துவாம்.