உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

இனி எத்தகைய துன்பமும் இல்லோமாயினோம். இனி இரு வினைகளுக்கும் வன்மையை விளைவிக்கும் இடையறாத பிறவியாகிய ஒலித்தலமைந்த பெருங்கடலை நீந்திக் கடந்தோமாயினோம்.எ-று.

இறைவனது தாளாகிய புணையைச் சேர்ந்தோர் பிறவியாகிய பெருங்கடலைக் கடந்து வீடு பேற்றுய்தல் உறுதியாகலின் ‘இறைவன்தாள் சேர்ந்தோம் பிறவிக் கடலை நீந்தினோம்’ என இறந்த காலத்தாற் கூறினார். ‘அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லாற், பிறவாழி நீந்தலரிது’ எனவும், ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார். இறைவனடி சேராதார்’ எனவும் வரும் திருக்குறள்கள் இத்திருப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கன. வினைக்கு அடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்கடல் எனப்பிரித்துரைக்க. அடல் - வன்மை. கனைகடல் - ஒலிக்கும் கடல்; ஈண்டு எதுகை நோக்கிக் கனைக்கடல் என ஒற்றுமிக்கது. பிறவியைக் கடலாக உருவகஞ் செய்து அதனைக்கடத்தற்கு உறுதுணையாகிய இறைவன் திருவடியைப் புணையாக உருவகஞ் செய்யாது விட்டமையின் இப்பாடல் ஏகதேசவுருவகம்.

காண்பார்க்கும் காணலாந் தன்மையனே கை தொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் — காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற வரன். (17)

இ-ள். தொன்மை மிக்க உலகத்திற்குக் காரணனாகி என்றும் நிலைபெற்றுள்ள அரசனாகிய இறைவன், தன்னைக் கட்புலனாகக் காணவேண்டுமென விரும்புவார்க்கும் அவர்தம் கண்களாற் காணத்தகும்