24
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னார மற்றொன்று பூண்.
(27)
இ-ள்: பொருந்தாதாராகிய அவுணர்களுடைய வலியழிய அவர்தம் மும்மதில்களையும் அம்பொன்றினால் எய்து எரித்தருளிய பெருமானே, நின்னைப் பலநாளும் பரவி வணங்கி அடியோம் இரந்து வேண்டுகின்றோம், எமது இறைவனாகிய நீ நின் திருமேனியில் பாம்பாகிய ஒன்றை அணிகலனாக விரும்பிப் பூணாது தவிர்க. (அதற்கு ஈடாகப்) பொன்மாலையாகிய மற்றோர் அணியினைப் பூண்டருள்வாயாக. எ-று.
‘அரவமாட்டேல்’ என்பது இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாம்.
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேன்மிளிர நன்கமைத்துக் - கோணாகம்
பொன்முடி மேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக விவர்.
(28)
இ-ள்: இறைவராகிய இவர் கோள் இழைக்க வல்ல நாகங்களுள் ஒன்றைத் திருமார்பிற் பூணாக அணிந்ததும் ஒரு பாம்பினைப் புலித்தோலுடையின் மேல் அரைக் கச்சாக நன்கு வரிந்து கட்டியதும் மற்றொரு பாம்பினைப் பொன்முடி மேற் சூடியதும் ஆகிய இச்செயல்களெல்லாம் நற்பேறிலாதேனாகிய ஏழையேற்கு யாதாய் முடியுமோ? எ-று.
தீண்டிவருத்தும் பாம்புகளால் இறைவர்க்குத் தீங்கு நேரின் அவரையின்றியமையாத எளியேனது