உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

வெளிப்பட்டுத் தோன்றி யருள்புரிபவன் இறைவன் ஒருவனேயாதலின் அவனது திருவருட் பெருமையே ஏனையெல்லார் பெருமைகளிலும் உயர்வறவுயர்ந்தது என்பது கருத்து. ‘ஆரொருவர் உள்குவா ருள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுத்தோன்றும்’ எனத் திருநாவுக்கரசரும் ‘எவ்வுருவில் யாரொருவர் உள்குவாருள்ளத்துள், அவ்வுருவாய்த் தோன்றியருள் கொடுப்பான்’ எனச் சேரமான் பெருமாளும் இத்திருப் பாடற்கருத்தினை இனிது விளக்குதல் காண்க.

ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் — வேமா
றொருகணையாற் செற்றானை யுள்ளத்தா லுள்ளி
அருகணையா தாரை யடும். (34)

இ-ள்: வலிய தீவினைகள், (செய்தோரைத் தொடர்ந்து சென்று) அவர்க்காம் முறைமையினை யறியாத சடப் பொருளே யானாலும், ‘நாம் அரன் அடிமை’ என்னுந் துணிபுடன் இறைவனையேத்தி வழிபடாத அவுணர்கள் தமக்குப் பாதுகாவல் செய்யும் அரண்களாக வானிடத்தே அமைத்துக்கொண்ட முப்புரங்களும் ஓரம்பினால் வெந்து சாம்பராகும்படியழித்த சிவபெருமானை நெஞ்சார நினைந்து அவனருளைச் சார்ந்தொழுகாதாரைத் தாமே அணுகிச் சுடுவனவாம். எ-று.

வல்வினைகள் ஆம் ஆறு அறியாவே (எனினும்), ஒரு கணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகு அணையாதாரை, அடும் என முடிக்க. இனி, ‘ஆமாறறியாமே’ என்பது பாடமாயின், ‘அருகணையாதாராகிய அன்னோர், தாம் ஆமாறு மற்றொன்று சூழினும்