உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நெறியாகிய வீடுபேற்றினைப் பெற்று இன்புறுவர் என்பது கருத்து.

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே — பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பிற் றழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு. (38)

இ-ள் பூணப்பெற்றதொரு மாலையாக வளைந்து ஊரும் பாம்பினையணிந்த இறைவனது திருமார்பின் கண்ணே பொருந்திவிளங்கும் கரிய நிறம் வாய்ந்த பன்றியினது கூரிய கொம்பானது, (ஞாயிற்றின்) ஒளிக்கற்றைகள் அனைத்தும் திரண்டு சேர்ந்த செவ்வானத்திலே தோன்றிய வெண்மதியைக் கொடிய பாம்பு தீண்டு தலால் (அம்மதி) தேய்ந்து சிறுகியதனை ஒத்துத் தோன்று மல்லவா? எ-று.

போலாதே-போலும். ஏகாரம் எதிர்மறை. கார் ஏனக் கூர்எறுகொம்பு என இயைக்க; கார்ஏனம் - கரிய திருமாலாகிய வராகம். வராகமூர்த்தியின் கொம்பினைப்பறித்து இறைவன் அணிந்துகொண்டான் எனப் புராணங்கூறும். செவ்வொளிபரவிய வானம் சிவபெருமானது திருமார்புக்கும், அவ்வானத்தில் சிறுகித்தோன்றும் பிறைமதி இறைவனது சிவந்த திருமார்பிலே திகழும் பன்றிக்கொம்பிற்கும் உவமையாயவாறு காண்க. ஈண்டுதல் - திரண்டு தன்கண்ணே வந்து சேர்தல்.

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
அம்பவள மேனி யது முன்னஞ்— செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து. (39)