உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

ஆகிய ஒளியுடையராய் இறைவன்பால் அன்புடைய வானோர்களே அவன் செய்யும் பிச்சை யேற்றல் முதலிய தொழில்களை விலக்க முன் வந்திலராயின், அத்தொழிலின் நோக்கத்தைச் சிற்றறிவினராய யாமோ உணர்த்த வல்லோம் என்பார், ‘பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமோ’ என்றும் கூறினார். இதனால், திங்கள் சூடுதல், பிச்சை யேற்றல் முதலாக இறைவன் செய்தருளும் தொழில்களின் நிறைகுறைகளைக் கண்டறிதல் சிற்றறிவுடைய மக்களாகிய நம்மனோர்க்கு ஒவ்வாததாம் என அம்மையார் குறிப்பால் அறிவுறுத்தருளினா ராயிற்று ‘அடிகள் செய்வன ஆர்க்கறிவொண்ணுமே’ எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

தனக்கே யடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே யருளாவா றென்கொல்— மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான். (44)

இ-ள்: உள்ளத்திற்கு இனிமைதரும் மிக்க புகழையுடையவனும் கங்கையை மணந்த நாயகனும் சிவந்த திருமேனியை யுடைமையால் சிவன் என்னுந் திருப்பெயரைத் தனக்கே யுரிய தாகக் கொண்டவனும் (தொழப்படும்) தேவர்களாலுந் தொழுது போற்றப் பெறும் தனிமுதல்வனும் ஆகிய இறைவன், (பிறரெவரையும் கருதாது) தனக்கேயடிமைத் தொண்டு பூண்டேனாகித் தன்திருவடிகளைப் பற்றுக் கோடாக அடைந்து வாழும் எளியேனுக்கு எளிவந்து அருளாமைக்குரிய காரணமாக என்பாலுள்ள குற்றம் யாதோ? எ-று.