49
நின் அருட்செயலின் தூய்மையினை எங்களுக்கு விளங்க அறிவுறுத்தல் வேண்டுமென்பார் ‘சொல்லாய்’ என்றும் கூறினார். புறம் - சிவபெருமானது முழு முதற்றன்மையை ஏற்றுக்கொள்ளாத புறச்சமய வாதிகள். இனி, புறம்பு ஏச எனப்பிரித்துப் பொருள் கூறினும் ஆம்.
நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் — தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவ மேலாட மிக்கு.
(57)
இ-ள்: எங்கள் இறைவனாகிய நீ, நின் தகுதிக்கு மாறாக உலகமெலாஞ் சென்று திரிந்து இரத்தல் தொழிலை மேற்கொண்டாயாயினும் நின் திருமேனியில் ஊரும் தீங்குதரும் பாம்பினை விட்டு விட்டுச் செல்வாயாக. (இங்ஙனமன்றி அதனையும் உடன்கொண்டு செல்வாயாயின் ) நஞ்சுடன் கூடிய அப்பாம்பு சினம் மிக்குப் படம் விரித்து ஆட (அதுகண்டு) அஞ்சி, உளந்தூயராகிய இளமகளிர் நின்முன் வந்து பலியிட மாட்டார்கள், எ-று.
நின்பால் அன்புடையாரிடத்து அச்சந் தரும் தோற்றத்தை விடுத்து அமைதியளிக்கும் திருக்கோலத்துடன் சென்று உய்யக்கொள்க என இறைவனை நோக்கி அம்மையார் வேண்டுவதாக இத்திருப்பாடல் அமைந்துளது. ‘இரப்பினும்’ என்புழி உம்மை, இனி இரத்தலாகாது என்பது பட நின்றது.
மிக்க முழங்கெரியும் விங்கிய பொங்கிருளும்
ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே — செக்கர்போல்