உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

‘நல்ல அடி’ என்றார். ஈண்டு நன்மையாவது, தன்னை வழிபட்ட அந்தணாளராகிய மார்க்கண்டேயரது உயிர் கவரவந்த கூற்றுவனைக் கீழே விழ உதைத்துத் தன்னடியாராகிய அவரைப் பாதுகாத்த பேரருளுடைமை. இங்ஙனம் கூற்றுதைத்த திருவடியை எமது முடிமேற் கொண்டமையால் இனிக் கூற்றுவனைச் சிறிதும் மதியோம் என்பார் ‘முக்கணான் நல்லஅடி மேற்கொடு கூற்றை மதியோம்’ என்றார். மேற்கொடு -(தலை) மேற்கொண்டு. குனிதல் - வளைதல்; வணங்குதல். மேலும் மேலும் எல்லையின்றி வரும் பிறவித் துன்பங்கள் எமக்கு உளவாகா என்பார், ‘இனி அவலமுண்டோ எமக்கு, என்றார்.

எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா
தெமக்கொருநாட் காட்டுதியோ எந்தாய்— அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடு மிடம். (70)

(பெரு வெள்ளத்தைச் சொரிந்து) அணைக்கவும் அணையாது பெருந்தீ சுடர்விட்டெரிந்தா லொத்த முறுக்கமைந்த சடையினையுடைய பெருமானே, இருள் மிக்க நள்ளிரவிலே பொங்கி மேலெரியும் தீயினிடையே நீ குதித்து ஆடும் இடத்தினை எமக்கு என்றாவது ஒரு நாள் காட்டியருள்வாயோ? எந்தையே, (அவ்விடத்தைக் காண வேண்டுமென்ற) இப்பேராசையோ எமக்கு என்றும் அடங்காத நிலையிலுள்ளது எ-று.

அறிவு ஆற்றல் முதலிய தகுதிக்கு ஏற்பத் தோன்றும் விருப்பத்தை ஆசை எனவும், அவரவர் தகுதிக்கு ஒவ்வாத நிலையில் அவர்கள்பால் தோன்றும்