60
அவாவினைப் பேராசை யெனவும் வழங்குதல் மரபு. எந்தாய் நீ எரிபாய்ந்தாடும் இடத்தை யாம் காண வேண்டும் என விரும்புவது எமது தகுதிக்கு மேற்பட்டதென்பதனை யாம் அறிவோம் என்பார் ‘எமக்கிதுவோ பேராசை’ என்றும், இது எம்மாற் காணவியலாதது என்பதனை யுணர்ந்திருந்தும் இவ் வேட்கையினை விட்டொழித்தற்கியலாத நிலையில் உள்ளோம் என்பார் ‘என்றுந்தவிராது’ என்றும் கூறினார். யாம் காணும் ஆற்றல் பெற்றிலேமெனினும் எத்தகைய பொருளையும் காட்டவல்ல நினது பேராற்றலுக்கு ஒரு சிறிதும் குறைவில்லையாதலின் எமது வேட்கையினை நிறை வேற்றி வைப்பது எந்தையாகிய நினது கடமையாம் என வற்புறுத்துவார் ‘எமக்கொரு நாட் காட்டுதியோ எந்தாய் எனப் பரிந்து வேண்டினார்.
இடப்பால வானத்தெழு மதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால்— இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங் காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.
(71)
இ-ள் வானத்தினிடத்தே விளங்கும் பிறை மதியை இறைவனாகிய நீ (நின் திருமுடியிலுள்ள) ஒப்பற்ற பாவைபோல்வாளாகிய கங்கை நங்கையின் அருகே முடிமேல் இடப்பக்கத்தில் அணிந்துள்ளனையாயின் நினது இடப் பாகத்தினைத் தனக்கேயுரியதாகக் கொண்ட மலைமகளாகிய உமாதேவியின் திருமேனி நிறத்தினைச் சிறிதும் கண்டிலோம். மூன்று கண்ணுடையாய் நீயாயினும் கண்டனையோ? கருதிப் பார்ப்பாயாக எ-று.