உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

நாமாலை — நாவினால் புனையப் பெறும் சொல்மாலை. இறைமைக் குணங்கள் இலராய ஏனைத் தேவர்களை வழிபடுதலை யொழிந்து பொருள்சேர் புகழுடைய நம் இறைவன் பொன்னடிக்கே வழிபாடு செய்க என்பது கருத்தாகலின் ‘நம்மீசன் பொன்னடிக்கே’ என்புழி ஏகாரம் பிரிநிலை. புனைந்தும் என உம்மை விரித்துரைக்க. எற்று என்பது ‘இறந்தது’ என்னும் குறிப்புப் பொருள்பட வந்த இடைச்சொல்; ‘எற்றென் கிளவி யிறந்தபொருட்டே’ என்பது தொல்காப்பியம்.

இருளி னுருவென்கோ மாமேக மென்கோ
மருளின் மணிநீல மென் கோ—அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண் மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி, (88)

இ-ள்: எவ்வுயிர்க்கும் நலஞ்செய்யும் பேரருளுடைய பெருமானே, செந்நிறம் வாய்ந்த சடையினிடத்தே ஒளிவிட்டு விளங்கும் வெண்மதியினை ஒப்பற்ற அணிகலமாக அணிந்தவனே, நினது திருநீல கண்டத்தின் ஒளியினை இருளின் வண்ணம் என்று கூறுவேனா? (கரு நிறத்துடன் உலகத்திற்குப் பயன் விளைத்தலாகிய உருவும் பயனும் கருதி) கரிய மேகம் என்று கூறுவேனா? (உயிர்கள் பால் அமைந்த அவித்தையாகிய மயக்கத்தை நீக்குந் தொழிலுடமை சாற்றி) மருளைக் கெடுக்கவல்ல ஆற்றலமைந்த நீல மணியென்பேனா? (இன்னதென்று உவமை சொல்ல அறிகின்றிலேன்) இறைவனாகிய நீயே இன்ன தன்மைத்தென எம்மனோர்க்குப் பணித்தருள்வாயாக எ-று.