பக்கம்:அலிபாபா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறாமையால் விளைந்த கேடு

21


வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காகத் தூக்கி வைத்திருந்த நாணயக்கோணிகளை அவர்கள் மற்ற நாணயங்களோடு கொண்டுபோய்ச் சேர்த்துக் கொட்டினர். இறந்து கிடந்தவன் குகைக்குள் எப்படி நுழைந்தான் என்பதைப்பற்றி அவர்கள் பன்முறை சிந்தித்துப் பார்த்தும் புலன் தெரியவில்லை. குகையின் மேல் முகட்டிலிருந்து யாரும் உள்ளே இறங்க முடியாது. குகையின் வாயிலை அடைத்திருந்த பாறையும் மந்திரச் சொற்களை உச்சரித்தாலன்றி வழி விடாது. இறந்து கிடந்த ஆசாமி மந்திரச் சொற்களை எப்படி அறிந்துகொண்டிருந்தான்? இந்தப் புதிர் அவர்களுக்கு விளங்கவேயில்லை. அவர்கள், காஸிமின் உடலை மேலும் இரண்டு துண்டுகளாக்கி, தங்கள் பொக்கிஷசாலைக் கதவின் இரண்டு பக்கங்களிலும், பக்கத்திற்கு இரண்டு துண்டுகளாகத் தொங்கவிட்டனர். இனியும் எவனாவது அங்கு வந்தால், அந்த அங்கங்கள் அவனுக்கு எச்சரிக்கை யாயிருக்கும் என்பது அவர்கள் கருத்து. பிறகு, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர். பாறையும் வெளி வாயிலை அடைத்துக்கொண்டது.

இரவு நேரமான பின்னும் தன் கணவன் வராததால், நகரிலே, காஸிமின் மனைவி மிகவும் வருத்தமடைந்தாள். அவள், மனம் தடுமாறிக்கொண்டே, அலிபாபாவின் வீட்டுக்குச் சென்று, நாதன் வராத காரணம் ஏதாயிருக்கலாம் என்று கேட்டாள். அவன் சென்றிருந்த இடம் அலிபாபாவுக்குத் தெரிந்திருந்ததால், அவன் மூலம் விவரம் தெரியும் என்று அவள் நம்பியிருந்தாள். அலிபாபாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/23&oldid=512481" இலிருந்து மீள்விக்கப்பட்டது