பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தைப் பற்றியும், அங்கு அரசுபுரிந்த சில அரச பரம்பரைகளைப் பற்றியும் பழந் தமிழ் நூல்களில் சில குறிப்புக்கள் உள்ளன. ‘மறந்தும் மழைமறா மகதநன் னாடு’ என்பது நீர்வளமுள்ள மருத நிலங்கள் நிறைந்த அந்நாட்டின் செழிப்பை எடுத்துக் காட்டும்.

‘சோழவள நாடு சோறுடைத்து’ என்றும், ‘தொண்டை நாடு சான்றோருடைத்து’ என்றும் புகழப்பெற்றிருக்கின்றன. மகத நாடு சோற்றையும் சான்றோர்களையும் ஒருங்கே பெற்று விளங்கியது. சியவனர், ததீசி போன்ற முனிவர்களும், வடமொழித் தொல்காப்பியரான பாணினியும், அவருடைய சூத்திரங்களுக்கு உரை செய்த வரருசியும், யோக சூத்திரங்களின் ஆசிரியரான பதஞ்சலி முனிவரும், வான நூலின் தந்தை என்று புகழ்பெற்ற ஆரியபட்டரும், அசோகரின் ஆசிரியரான பிங்கலரும் மகதத்திலே வாழ்ந்து பெருமை பெற்றவர்கள். மகதத்து அமைச்சர்கள் மதிவாணர்கள் என்று மகாபாரதம் புகழ்ந்துரைக்கின்றது. உலகப் புகழ் பெற்ற தட்சசீலம், நாலந்தா, விக்கிரமசீலம் ஆகிய பல்கலைக் கழகங்கள் பாரத நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்தன. இவைகளில் ஆசியாவின் பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயிற்சி பெற்றனர். தட்சசீலம் மகதப் பேரரசிலிருந்து பிரிந்து நெடுங்காலம் தனித்திருந்ததும் உண்டு. ஆனால் நாலந்தாவும், விக்கிரமசீலமும் மகத எல்லைக்குள்ளேயே இருந்தவை.