பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பாரத நாட்டின் பழம்பெரும் சரித்திரத்தில் முக்கால் பகுதி மகதத்தின் சரித்திரமாகும்.

மகதத்தின் பல்கலைக் கழகங்களான நாலந்தாவும், விக்கிரமசீலமும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கலைகளிலும், சாத்திரங்களிலும் பயிற்சியளித்து வந்ததுடன், பௌத்த தருமத்தின் வளர்ப்புப் பண்ணைகளாகவும் விளங்கி வந்தன. நாலந்தாவைப்பற்றிச் சீன யாத்திரிகர் யுவான சுவாங் விவரமாக எழுதி வைத்திருக்கிறார். தாமரை மலர்களுடன் பல ஏரிகள் சூழ்ந்த இடத்தில், விண்முட்டும் மாடங்களும், கோபுரங்களும் விளங்க, அப்பல்கலைக் கழகம் பதினாயிரம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு பணியாற்றி வந்ததாக அவர் குறித்துள்ளார். அங்கே கண்டிப்பான ஒழுக்க விதிகள் கடைப்பிடிக்கப் பெற்று வந்தன. மாணவர்களுடைய வினாக்களுக்கு ஆசிரியர்கள் பதில் கூறி விளக்குவதற்குக்கூடப் பகற்பொழுது போதவில்லை என்று யாத்திரிகர் வியந்துள்ளார். புத்தர் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய நாலந்தா, பின்னால் பல மன்னர்களுடைய ஆதரவு பெற்று வளர்ந்தோங்கி, 12 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பெருமையுடன் விளங்கிற்று. இத்-சிங் என்ற சீன யாத்திரிகர் அதற்கு 200 கிராமங்கள் வரை மானியமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

கிரேக்க மன்னரால் அனுப்பப்பெற்ற நல்லெண்ணத் தூதுவரான மெகஸ்தனிஸ் கி. மு. 300 இல் மகத நாட்டிற்கு வந்து, நீண்ட நாள் சுற்றிப் பார்த்து, தாம் கண்டவற்றைப் பற்றிய பல