பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

குறிப்புக்கள் எழுதியுள்ளார். ஆனால் அவை வேறு சில சரித்திர ஆசிரியர்களுடைய நூல்களிலே மேற்கோள்களாகக் காட்டப் பெற்றிருக்கின்றனவே அன்றி, அவை தனி நூலாக இல்லை. எனினும் அக்குறிப்புக்களைக் கொண்டே மகதப் பேரரசினுடைய பெருமையையும், மக்கள் நிலையையும், தலைநகரான பாடலிபுத்திரத்தின் சிறப்பையும் நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அக்காலத்தில் இந்தியர் வாழ்க்கைக்குத் தேவையான பல வசதிகளையும் ஏராளமாகப் பெற்றிருந்தனர் என்றும், நெடிய உருவமும், நிறைந்த பண்பும் பெற்றுக் கம்பீரத் தோற்றத்துடன் விளங்கினர் என்றும் அவர் எழுதியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள விவரமாவது: ‘இவர்களுடைய ஒழுக்கம் மிக்க உயர்தரமானது; நான் சந்தித்த இந்துக்கள் அனைவரும் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்தவர்களாகக் காணப்பெற்றனர். இந்தியாவில் எழுத்து வடிவமான சட்டங்களில்லை; பண்டை வழக்கத்தை அனுசரித்து நினைவின் துணைகொண்டே இம்மக்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நீதித் தலங்களில் வீணாக வழக்காடும் மனிதன் பொது நன்மைக்கு எதிராகத் தொந்தரவு கொடுப்பவனாகவே கருதப்படுகிறான். வீடுகளையும் உடைமைகளையும் மக்கள் காவலில்லாமலே விட்டுச் செல்கிறார்கள்; ஆனால், தீயணைக்கப் பயன்படும் கருவிகளை மட்டும் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள். அக்கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இல்லாவிட்டால், வீட்டுக்காரருக்குத் தண்டனை உண்டு. நாட்டில் பெருவாரியான பஞ்சம்