பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

திருந்தன. பாடலியிலிருந்து அனுப்பப் பெற்ற பொருள்கள் பல மரக்கலங்களின் மூலம் பாபிலோன், எகிப்து, கிரீஸ் மற்றும் கீழ்த்திசை நாடுகள் பலவற்றிற்கும் சென்றன.

நகரின் நடுவே முற்றிலும் மரத்தினால் கட்டப் பெற்ற அரண்மனை நடுநாயகம்போல் விளங்கியது. அது மரப் பலகைகள், கட்டைகளினாலேயே அமைந்தது எனினும், அது மிக உயரமாயும், மிக அழகான வேலைப்பாடுகளுடனும் விளங்கியதாகப் பார்த்தவர்கள் வருணித்துள்ளார்கள். தூண்களைச் சுற்றி மூடியிருந்த தங்கத் தகடுகளில் தங்கக் கொடிகளும், பூக்களும், வெள்ளிப் பறவைகளும் பதிக்கப்பெற்றிருந்ததாகவும் அவர்கள் குறித்துள்ளார்கள். அரண்மனையைச் சுற்றிப் பூந்தோட்டங்களும், பொய்கைகளும் கண்ணுக்கினிய காட்சிகளாக விளங்கின. அரண்மனைக்கு வாயில்கள் நான்கு; ஒவ்வொன்றிலும் ஈட்டிகள் முதலிய ஆயுதங்களுடன் போர் வீரர்களும், குதிரை வீரர்களும் காவல்காத்து நின்றனர். உள்ளேயும் மிகுந்த பாதுகாப்புக்கள் இருந்தன. கருவூலம், படைக்கலக் கொட்டில் முதலியவைகளுக்குச் சிறந்த பாதுகாப்பு இருந்ததுடன், அரசருக்கு அருகே அவரைக் காப்பதற்காக வில்லேந்திய வீராங்கனைகளும் படையாகத் திரண்டு நின்றனர்.

இக்காலத்தில் பெரிய நகரங்களில் நகராண்மைக் கழகங்கள் அமைந்திருப்பது போல, 2,000 ஆண்டுகட்கு முன்னரே பாடலியில் முப்பது உறுப்பினர்களைக் கொண்ட நகராண்மைக் கழகம் அமைந்திருந்தது. அக்கழகம் ஆறு குழுக்களாகப்