பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

நுழைந்த பாரசீகப் படையினரை அவனும் அவன் வீரர்களும் கடுமையாகத் தாக்கி வீழ்த்திக்கொண்டிருந்தனர். இறுதிவரை அப்படியே செய்து அவர்கள் வெற்றியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இடையில் யவனத் துரோகி ஒருவன் அவர்கள் இருந்த இடத்திற்கு வருவதற்கு வேறுவகையாக வழியிருந்ததைக் காட்டிக் கொடுத்து விட்டதால் எதிரிப்படைகள் உள்ளே நுழைந்து, நாற்புறமும் வளைந்து கொண்டன. அப்பொழுதும் லியோனிதாஸ் தளரவில்லை. அவனும் யவன வீரர்களும், முன்னேறிப் பாய்ந்து, வீரப்போர் புரிந்து, வீர சுவர்க்கம் அடைந்தனர். தெர்மோபிலே கணவாயில் லியோனிதாஸ் செய்த போராட்டத்தைப் பற்றிய வரலாற்றை இன்றைக்கும் பல நாடுகளிலும் குழந்தைகள் படித்துப் பயனடைகின்றனர். அவன் பாரசீகப் படையைச் சிறிது காலம் தடுத்து நிறுத்தியதால், எஞ்சியிருந்த யவனர் படை தக்க இடத்திற்குச் சென்று தன்னைக் காத்துக்கொள்ள முடிந்தது.

பின்னால் பாரசீகப் பெரும்படை, கணவாயைக் கடந்து உள் நாட்டிலே புகுந்து, ஆங்காங்கே வெற்றிகள் பெற்று, ஏதன்ஸை நோக்கிச் சென்றது. அப்பொழுதும் அங்கிருந்த தலைவர்களும் தளபதிகளும் போரில் எவர் தலைமை தாங்குவது என்பது பற்றிப் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அதீனியத் தளபதியாயிருந்த தெமிஸ்டாகிளிஸ் என்பான், மிகவும் திறமையோடும் வீரத்தோடும் வாதாடி, பாரசீகப் படையை எதிர்த்து நிற்க ஏற்பாடு செய்தான். முடிவில்

1155-2