பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

எதிரிகள் எறிந்த ஈட்டி ஒன்றினால் குத்தப்பட்டுக் கீழே சாய்ந்தான். உதிரம் ஒழுகி, தாங்க முடியாத வேதனையில் இருக்கும் போதும், அவன் நண்பர்களிடம் போர் என்ன வாயிற்று என்று வினவினானாம். அவனுடைய படைக்கே வெற்றி என்று அறிவிக்கப் பெற்றதும், "எல்லாம் நன்மையே!" என்று அவன் வியந்து கூறினான். இரண வைத்தியர்கள், அவனது உடலில் தைத்திருந்த ஈட்டியை வெளியே உருவியவுடன் அவன் மரித்து விடுவான் என்று அறிவித்தனர். அவ்வாறு ஈட்டியை எடுக்க எவரும் மனம் துணியாதிருக்கையில், எபிமினுண்டஸ், தானே தன் கரங்களால் அதைப் பறித்தெறிந்து, தாயகத்திற்காக மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிக் கொண்டான்.

அவன் மரணத்துடன் தீப்ஸின் பெருமையும் மறைந்தது. அத்துடன் கிரேக்க நாட்டின் சுதந்தரமும் ஒழிந்தது. நகரங்கள், போட்டியும் பொறாமையும் காரணமாக, ஒன்றோடு ஒன்று பொருது கொண்டிருக்கையில், வடக்கே இருந்த மாசிடோனிய நாட்டு மன்னரான பிலிப் என்பவர் வட நாட்டின்மீது படையெடுத்து வந்து ஒவ்வொரு நகரமாகப் பிடித்துக்கொண்டார். தெற்கே யிருந்த ஸ்பார்ட்ட மக்கள் மட்டும், 'நாங்கள் தலைமை தாங்கி வழிகாட்டி பழக்கப்பட்டவரே அன்றிப் பிறரைப் பின்பற்றிச் செல்வதை அறியோம்!' என்று கூறி, அவருடன் இணங்க மறுத்தனர். மாசிடோனியரும் மற்ற யவனரைப் போல அதே இனத்தைச் சேர்ந்தவரே யாவர். பிலிப்பின் நோக்கம் யவனரை ஒன்றாகத் திரட்டிப் பாரசீகத்தின்மீது