பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

அவன் அவரிடம் பதின்மூன்று வயது முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே பயிற்சி பெற முடிந்தது. அரிஸ்டாட்டில் யவன நாட்டிலேயே நிகரற்ற பேரறிஞர் என்று புகழ் பெற்றிருந்தவர். அவரிடம் தெரிந்து கொண்ட செய்திகளோடு, அலெக்சாந்தர் பிற்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆராய்ச்சி அறிவையும் பெற்றான். "என் தந்தை எனக்கு வாழ்வளித்தார்; ஆனால் எப்படி வாழவேண்டும் என்பதை எனக்குக் கற்பித்தவர் அரிஸ்டாட்டில்" என்று அவனே கூறியுள்ளான்.

யவன மகாகவி ஹோமர் எழுதிய 'இலியாது' என்ற போர்க் காவியத்தைப் படிப்பதில் அலெக்சாந்தருக்கு விருப்பம் அதிகம். இரவு நேரங்களில் அவன் அதைப் படிப்பான்; அவன் உறங்கும் போதும், அஃது அவன் தலையனை யடியிலேயே இருக்கும். பழம் பெரும் யவன வீரர்கள் டிராய் நகரை எதிர்த்துப் போராடிய வரலாறு பற்றி அக்காவியத்தில் படித்துப் படித்து, அந்த வீரர்களில் முதல்வனான அகிலிஸ் என்பவனைப் போல் தானும் விளங்கவேண்டும் என்று அவன் கருதி வந்தான். மற்றும் அவன் செயல் வீரனாகத் திகழ்வதற்கு அடிக்கடி தூண்டி ஊக்கமளித்து வந்தவள் அவனுடைய அன்னையான ஒலிம்பியஸ். அவள்,"மக்கள் உன்னைப் பெருந்தலைவனாகக் காணவே விரும்புகின்றனர்; நீ புத்தகங்கள் படிக்கிறாய் என்பதைக் கேட்பதற்காக அன்று !" என்று அவனுக்கு நினைவுறுத்துவது வழக்கம்.

அலெக்சாந்தர் இருபதாம் வயதில் அரியணை ஏறினான். அப்பொழுது நான்கு பக்கங்களிலும்