பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

ருடைய பரிவாரத்தார்களும், குடும்பத்தினரும் சிறைப்பட்டனர். அவர்களை அலெக்சாந்தர் அன்புடன் முறைப்படி காப்பாற்றி வந்தான். பாரசீகம் தளர்ந்து வீழ்ந்து விட்டதால், மேற்கொண்டு அதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அவன் ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடபகுதியிலுள்ள எகிப்தின்மீது படையெடுத்தான். எகிப்தும் அப்பொழுது பாரசீகத்திற்கு அடிமைப்பட்டிருந்தது. அங்கு வெற்றி பெற்று, நைல் நதியின் முகத் துவாரத்தில் 'அலெக்சாந்திரியா' என்று தன் பெயராலேயே ஒரு பெரு நகரையும் அமைத்துவிட்டு, ஓராண்டுக்குப்பின் அவன் மீண்டும் ஆசியாவுக்குத் திரும்பி, தரியஸைத் தேடலானான். அப்பொழுது தரியஸ், யூப்ரடிஸ் நதிக்கு மேல்புறமிருந்த நாடு முழுவதையும் விட்டுக் கொடுப்பதாகவும், மேற்கொண்டு போரை நிறுத்தவேண்டும் என்றும் அலெக்சாந்தருக்குச் செய்தி அனுப்பினார். அச்செய்தியைப் பற்றிச் சிந்திக்கக்கூட அவனுக்கு மனமில்லை. ஏனெனில், தரியஸ் தனக்குச் சமமான ஓர் அரசன் என்ற முறையில் அவருடன் சமாதானம் செய்து கொள்ளவே அவன் விரும்பவில்லை. ஆகவே அவன், தரியஸ் தன்னை ஆசியாவின் அதிபதியாக ஏற்றுக்கொண்டு, பிறகு அவருக்கு வேண்டியதைத் தன்னிடம் இரந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பதிலனுப்பிவிட்டு, பத்து இலட்சம் வீரர்களைக் கொண்ட பாரசீகப் படையை மீண்டும் முறியடித்து, தரியஸின் அரண்மனையையும் பிடித்துக் கொண்டான். தரியஸ், தப்பி ஓடுகையில், தம் ஆட்களில் ஒருவனாலேயே கொலை செய்யப்பட்டார்.