பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அலெக்சாந்தர் மிகுந்த தாராள சிந்தையுள்ளவன்; நிதானமாக யோசிக்கும் தன்மை பெற்றவன். ஆயினும் செருக்கும், தான் மனித நிலைக்கு மேம்பட்டவன் என்ற இறுமாப்பும் சில சமயங்களில் அவன் சிந்தையைக் கலக்கிவிடும். பணிந்தவர்களுக்கு அவன் அருள் பொழிவான். எதிர்த்து நின்றவர்களுக்கு அவன் எந்தக் கொடிய தண்டனையும் கொடுத்துவிடுவான். தன் உயிர்க்கு உயிராகப் பழகிய சில நண்பர்களைக்கூட அவன் வதைத்து விட்டுப் பின்னால் வருந்தியிருக்கிறான். முன்னர் யவனத்தில் திப்ஸ் நகரைப் பிடித்ததும், அதை அவன் சுட்டெரித்துவிட்டான். பண்டைப் பெரு நகரங்களான டைர், காஸா போன்றவைகளையும் நெருப்புக்கு இரையாக்கினான். கோடிக்கணக்கான பொருள் மதிப்புள்ள பாரசீக மன்னரின் அரண்மனையும் எரிக்கப்பட்டது. அவன் வெஞ்சினம் கொண்டு விட்டால், பிறகு அதை அடக்கிக் கொள்ளவே முடியாது. எண்ணிறந்த வெற்றிகளும், ஏராளமாகச் சேர்ந்த செல்வங்களும் அவனை இறுமாந்திருக்கச் செய்திருக்க வேண்டும்; அவற்றுடன் அளவுக்கு அதிகமான குடிப் பழக்கமும் சேர்ந்து கொண்டது.

அலெக்சாந்தர் மாசிடோனியாவிலிருந்து புறப்படும்பொழுது அவனுடைய படை, யவன வீரர்கள் அடங்கிய தேசியப் படையாக இருந்தது. ஆனால், பல நாடுகளில் வெற்றி பெற்று, ஆங்காங்கே புதிய புதிய இனத்தார்களைப் படையில் சேர்த்துக் கொண்டதால், பின்னால் அது பல நாட்டார் சேர்ந்ததாக விளங்கிற்று. ஆயினும் அதற்கும் தன் மாசி-