பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

இங்கே பல அதிசயங்களைக் கண்டான். அம்பியைப் போன்ற அடிவருடிகள் இரண்டொருவரைத் தவிர, பல்லாயிரம் பாரத வீரர்கள் முன் வைத்த காலைப் பின் வாங்காமல் உறுதியுடன் போர் செய்ததை அவன் கண்டான். போரில் இந்தியர் அறமுறை வழுவாது நின்றதிலும் அவன் வியப்படைந்தான். முன்னர் அவன் வெறும் காட்டுமிராண்டிகள் வாழும் நாடு என்று எண்ணியிருந்தது மாறி, உயர்ந்த நாகரிகமும் செல்வமும் பெற்ற நாடு இஃது என்பதை அறிந்து கொண்டான். யவனர்களைப் போலவே, கல்வியிலும் கலைகளிலும் இந்தியர்கள் ஆர்வமுள்ளவர்கள் என்பதையும், மருத்துவத்திலும், இரண சிகிச்சையிலும் மேம்பட்டவர்கள் என்பதையும் தெரிந்துகொண்டான். எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீக வாழ்வில் இந்தியத் துறவிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதையும் கண்டு வியந்தான். போரஸைப் போரில் சந்தித்த பின், இந்நாட்டின் எந்தப் பகுதியையும் நெடு நாள் அடக்கி வைத்திருக்க முடியாது என்பதையும் தெரிந்திருப்பான். அவன் ஊருக்குத் திரும்பு முன்பே, அவன் பிடித்த நாடுகள் ஒவ்வொன்றாக எதிர்த்துக் கிளம்பிவிட்டன.

பஞ்சாபிலிருந்த சமயத்திலேயே, அலெக்சாந்தர் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் யமுனையும் கங்கையும் பாயும் வளமான பிரதேசங்களைப்பற்றியும், மகத இராச்சியத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தான். அப்பொழுது மகதத்தில் ஆண்டு வந்த நந்த வமிசத்தைச் சேர்ந்த சுகற்பன் என்ற மன்னனிடம் 2,00,000 காலாட் படையினரும், 4,000