பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பாடலியில் தங்கியிருந்தால், அவருடைய உயிருக்கே ஊறு நேர்ந்திருக்கும்.

நல்ல வேளையாக அவருக்குச் சாணக்கியருடைய உதவி கிடைத்தது. சாணக்கியரை விஷ்ணுகுப்தர், கெளடில்யர் என்றும் கூறுவதுண்டு. அவர் அந்தணர்; வேதங்களை அறிந்தவர்; கலைக் கடலைக் கரைகண்டவர்; ஆசையற்றவர்; பிடிவாதமும் கோபமும் மிக்கவர்; மதியால் விதியை வெல்பவர் என்றெல்லாம் புகழப் பெற்றவர். பொம்மைகள் போல் கொலுவீற்றிருந்த நவநந்தர்களை ஒழித்துக் கட்டி, மகதநாட்டை விடுவிக்கச் செய்யவேண்டும் என்று அவரும் உறுதி கொண்டிருந்தார். சந்திரகுப்தரோ இயற்கையிலேயே அரசுரிமையுள்ளவர்; மகாவீரர். இருவரும் சேர்ந்து மகத இராச்சியத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருந்தனர். தட்சசீலத்தில் யவன வீரனான அலெக்சாந்தரைச் சந்தித்ததிலிருந்து, சந்திரகுப்தருக்குத் தாமும்அவனைப்போல வெற்றி வீரராக விளங்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இராச்சியத்தைப் பிடித்துக்கொள்வதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டே இருந்தார் சாணக்கியர்.

அலெக்சாந்தர் கி. மு. 323 இல் பாபிலோனில் மரணமடைந்தபின், சந்திரகுப்தரும் சாணக்கியரும் பாஞ்சாலப் பகுதியில் நாடு நகரங்களை யெல்லாம் சுற்றி, எங்கும் தேசிய எழுச்சியைத் தோற்றுவித்தனர். மக்கள் அந்நியர் ஆட்சியைப் பூண்டோடு ஒழித்துவிட முன்வந்தனர். தட்ச சீலத்திலிருந்த யவனப் படை வெளியே துரத்தப்பட்டது.