பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அவன் இசைவு தெரிவித்தான். அதன்படி கி. மு. 303 இல் தட்சசீலத்தில் உடன்படிக்கை நிறைவேற்றப் பெற்றது. சந்திரகுப்தர் செலியூகஸின் மகளையும் மணந்துகொண்டு, அவனுக்கு 500 யானைகளைப் பரிசாக அளித்தனுப்பினார். முன்னர் அலெக்சாந்தரின் தலைமையில் இந்தியாவுக்கு வந்து போரிட்ட தளபதிகளில் செலியூகஸ் ஒருவன். போரில் யானைகளின் வலிமையை அவன் நேரில் பார்த்தறிந்தவன். மேலும் அவனுக்கு அப்பொழுது யானைகளின் உதவி மிகவும் தேவையாயிருந்தது. ஆசியா மைனரிலும் சிரியாவிலும் ஆண்டுகொண்டிருந்த ஆன்டி கோனஸைத் தான் எதிர்த்து விரட்ட அவை பயன்படும் என்று கருதி அவன் அவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினான்.

நாளடைவில் ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியா முழுதும் சந்திரகுப்தர் வசமாயிற்று. தென் திசையில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களாக இருந்த தமிழகம் மட்டும் தனித்திருந்தது. கீழைக் கடற்கரையை ஒட்டி மகாநதிக்கும் கோதாவரி நதிக்கும் இடையிலிருந்த கலிங்க நாடு முன்னரே மகத மன்னனுக்கு அடங்கிக் கப்பம் கட்டி வந்து கொண்டிருந்தது. சந்திரகுப்தர், பாடலியைத் தாக்கு முன்னரே கலிங்க மன்னனுடன் ஒப்பந்தம் பேசி, உதவி பெற்றிருந்தார். அதன்படி அவர் மகதத்தைத் தாக்குகையில்,கலிங்க மன்னன் தன் படையுடன் சென்று, அவருக்கு உதவியாகத் தென் பக்கத்திலிருந்து போர் செய்தான். எனவே அவனும் அவர் ஆட்சியை ஏற்றுக்