பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சென்றதாகவும், மோரியப் படையும் அதுவரை சென்றதாகவும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இந்தப் படையெடுப்பு சந்திரகுப்தர் காலத்தில் நடந்திருக்க முடியாது. வட இந்தியாவிலேயே அவர் தமது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. மேலும் அவர் கலிங்க மன்னன் தமது ஆணையை ஏற்றால் போதும் என்று, அவனிடம் சமாதானமாகவே இருந்து வெற்றியடைந்தார். ஆந்திர மன்னரிடமும் தமிழக மன்னரிடமும் அமைதியாகவே அவர் நட்புக் கொண்டிருந்தார். பின்னர் அசோகர் காலத்திலும் தமிழகத்தின்மீது படையெடுப்பில்லை. ஆகவே பிந்துசாரர் காலத்திலேயே மோரியப் படை இந்தப் பக்கம் வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படை வென்ற இடங்களைக் கைப்பற்றி வைத்துக் கொள்ளவில்லை என்று வரலாற்று ஆசிரியர் வி. ஏ. ஸ்மித் குறித்துள்ளார்.

சந்திரகுப்தர் காலத்தில் ஏற்பட்ட யவன நாட்டு உறவைப் பிந்துசாரர் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார். யவனத் தூதரும், எகிப்திய மன்னன் தாலமி அனுப்பிய தூதரும் பாடலியில் தங்கினர். தந்தையார் அளித்த பேரரசை எல்லாத் துறைகளிலும் வலிமைப் படுத்தி, உறுதி பெறச் செய்தார் பிந்துசாரர்.

பிந்துசாரருக்குப் பின்னர் அவருடைய மைந்தர் அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், அரசுரிமை பற்றிய ஏதோ பூசல் காரணமாக, நான்கு ஆண்டுகள் காத்திருந்த பின்பே, அவர் முடிபுனைந்தார்.